பார்வதித் தாயின் வாழ்வும் அதிபதியும் தன்பதியும் தான்பதியும் ஈஸ்வரன் கோவில் தோற்றமும்.

saint-parvathi-ammaal-paintingஅறிமுகம்

கோடானுகோடி பிறவிகளில் செய்த புண்ணியத்தால் மனிதப்பிறவி நமக்குக் கிடைத்திருக்கிறது.

“உண்டு பல்யோனி யெல்லாம் ஒழித்து மானிடத்துதித்தல் கண்டி

ல் கடலைக் கையால் நீந்தினன் காரியங் காண்

    ” என்று சிவஞானசித்தியார் மானிடப்பிறவியின் அருமையைக் கூறுகிறது

அரிது அரிது மானிடராதல் அரிது” என்கிறார் ஒளவையார். “மானிடராய்ப் பிறந்தாலும் தெய்வம் உண்டு என்னும் சித்தம் உடையராய், சிவத்தை வழிபடும் மரபில் பிறப்பது மிகவும் அரிது” என்கிறது சித்தியார்.

எல்லாச் சமய நெறிகளையும் தன்னகத்தே கொண்டு, அவைகளுடன்பிணங்காமல், இணங்கி, என்றும் தன்னியல்பு குன்றாமல், அரசு புரிய வல்லது நம் சைவ சமயம்.

இறைவன், உயிர், தளை என்ற இம் மூன்றும் என்றும் உள்ள பொருட்களாம். இது தான் நம் சமயத்தின் அடிப்படை உண்மை. கேவலாவத்தை என்கின்ற ஆணவ இருளில் ஆன்மாக்கள் கட்டுண்டு, முழுத் துன்பத்துடன் அறிவு சிறிதும் இன்றிக் குழவிகளைப் போலக் கிடந்தன. இறைவன் தன் அளப்பருங் கருணையால் அவ்வுயிர்கட்கு இந்த உடம்பையும் உடம்பில் உள்ள கரணங்களையும் உலகத்தையும், உலக நுகர் பொருள்களையும், பிரகிருதி மாயையிலிருந்து உண்டாக்கி வழங்கி அருளினான்.

என்று நீ, அன்று நான் உன் அடிமை அல்லவோ?” இறைவன் என்று உள்ளானோ அன்றே உயிர்களாகிய நாமும் இருக்கிறோம்.

ஞானம் மூன்று வகைப்படும். அவை பாசஞானம் பசுஞானம், பதிஞானம் என்பன.

பாச ஞானத்தையும், பசு ஞானத்தையும் அகற்றிப், பதியை அவன் அருளால் உணர்ந்து அப்பரமன் அடிக்கீழ் நின்று உணர்தலே பதி ஞானமாகும். இச்சிவஞானத்தைத் தெளிவுறத் தெரிவிக்க அமைந்ததே “அதிபதியும் தன்பதியும் தான்பதியும்; புலனேஸ்வரி அம்பாள் சமேத அதிபதீஸ்;வரன் கோவில்”.

பக்குவம் அடைந்த அடியார் ஒவ்வொருவரும் இறைவனும் கலப்பினால் ஒன்று பட்டு நிற்கும் அத்துவித நிலையையும், பொருளால் இறைவன் அவருக்கு வேறாய் நின்று காட்டும் உதவியைச் செய்யும் அத்துவித நிலையையும் இறைவன் அவரோடு நின்று காணும் உதவியைச் செய்யும் அத்துவித நிலையையும், குறித்து நிற்கிறது இப்பெயர். இந்த மூவகை அத்துவிதங்களையும் சிவஞானபோதம்

அவையே தானேயாய் இரு வினையில்

போக்கு வரவு புரிய ஆணையின்

நீக்கம் இன்றி நிற்கும் அன்றே”

என்று விளக்குகின்றது.

அவையே தானேயாய் என்ற சொற்றொடர் அவையேயாய், தானேயாய், அவையே தானேயாய் என்று மூன்று வகைப்பட்டு நின்று பொருள் தருகின்றது.

அவையேயாய் என்பதனால், உடலின்கண் உயிர் நிற்கும் போது உடல் வேறு உயிர் வேறு பிரித்துக் கூற முடியாமல் உடலேயாய் இருப்பது போல இறைவன் ஆன்மாக்களுடன் கலந்து பிரிப்பின்றி நிற்கின்றான்.

தானேயாய் என்பதனால், காணும் தன்மையுடைய கண்ணைக் காணச் செய்வதற்கு கண்ணின் வேறாய் கதிரவன் ஒளி உதவுவது போல ஆன்மாக்களின் வேறாய் நிற்கின்றான்.

அவையே தானேயாய் என்பதனால்;, காணும் தன்மை உள்ள கண்ணானது ஆன்ம போதம் இல்லாத போது, காணுமாறு இல்லையாதனின் கண்ணுக்கு எவ்வாறு ஆன்ம போதம் உடன் நின்று உதவுகின்றதோ, அவ்வாறு உடனாய் நின்று இறைவன் அருளுகின்றான் என்று சிவப்பிரகாசமும் இதனை வலியுறுத்துகின்றது. இத் தத்துவத்தை உணர்த்தி நிற்கும் இவ்வாலயத்தை உருவாக்கிய பார்வதித் தாயின் வரலாறு அற்புதமானது.