பார்வதித் தாயின் வாழ்வும் அதிபதியும் தன்பதியும் தான்பதியும் ஈஸ்வரன் கோவில் தோற்றமும்.
தாயாரின் பூசையின் தன்மை
நாளாந்தம் இரு காலப் பூசைகள் நடை பெற்ற போதிலும் திங்கள் தோறும் அபிஷேகங்கள் செய்த பின்பு கோவில் முன்றலில் சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதித்தும் வெள்ளிக்கிழமைகளில்; விசேட பூசையும் நடை பெறும். இரவுப் பூசையின் போது விநாயகருக்குப் பூசை முடித்து வந்து சிவனுக்குப் பூசை செய்வார். பின்பு மகாமண்டபத்திற்கு வந்து சரஸ்வதி, சந்தான கோபாலன் ஆகிய மூர்த்தங்களுக்குப் பூசை செய்யு முன் மண்டபத்தில் மேற்குக் கிழக்காக (மேற்குப்பக்கம் முகமும் கிழக்குப்பக்கம் வாலும் ) விரித்த புலித்தோலில் பன்னீர் தெளித்து வெண் மலர் (நந்;தியாவட்டம், மல்லிகை, முல்லை, பவளமல்லிகை) பரப்பி, வடக்கு முகமாக நின்று, தனது சிரசில் மலர்களை வைத்துத் தன் முகத்தை மண்டபத்தின் உள் நிற்பவர்களோ வெளி நிற்பவர்களோ பார்க்க முடியாதபடி“தான் அதுவாக”(சிவோகம் பாவம்) சிறிது நேரம் தியானத்தில் நின்ற பின்பு விசேட தீபாராதனைகளை ஆத்மார்த்த பூசையாகச் செய்வார். அதன் பின், பைரவர் நந்தி மூர்த்தங்களுக்கு உதவியாளர்களாக நிற்கும் தாயாரின் மூத்ததம்பி கந்தையாவின் மகன் திரு பாலசிங்கம் இரண்டாவது தம்பி வேலுப்பிள்ளையின் மகன்மார் திரு பாலசுந்தரம் புஷ்பநாதன் ஆகியோர் பூசை செய்வர். நாளடைவில் இவர்களின் படிப்பும் உத்தியோகமும் இவர்களை வேறு இடங்களுக்குச் செல்ல வைக்க இவர்களின் தம்பியும் தாயார் அரவணைப்பில் வளர்ந்தவருமான தங்கவடிவேல்; செய்யலானார். தாயாரின் மருமக்கள் ஊரில் நிற்கும் போது பூசைக்குரிய சகல ஒத்தாசைகளையும்; செய்யத் தவறுவதே இல்லை. இவர்களில் ஒருவரால் சகல மூர்த்தங்கட்கும் பூசை நிறைவானதும் அடியார்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு விபூதிச் சங்கைக் கையிலே வாங்கி நம்பிக்கையுடன் நாடி வரும அடியார்களுக்கு விபூதியுடன் வரங்களும் கொடுப்பார். அப்போது அவர்களின் சேமத்திற்காகவும் வழிபாடு செய்வார்.
திங்கள் வெள்ளிக்கிழமைகளில் அந்த சுயம்பு லிங்கத்திற்கு பாலினால் அபிஷேகஞ் செய்து, சந்தனம், பன்னீர், அத்தர் மற்றும் அபிஷேகத் திரவியங்களால் காப்பிட்டு பேழையுள் விபூதிக்கு மேல் வைத்து, சிவப்புப் பட்டுச் சாத்தி பூசிக்கப் படுவதுடன் நாளாந்தம் காலை மாலைப் பூசைகளில் அந்த நாக சுயம்பு மூர்த்திக்குப் பால் பழம் தேன் சர்க்கரையுடன் சேர்ந்த நைவேத்தியம் நிவேதித்து, இன்று வரை அந்த சுயம்பு லிங்கம் பூசிக்கப்பட்டு வருகிறது.
கருப்பையுள் இருக்கும் போது இரு உடல்களுடன் முகங்கள் பாதி பாதியாக ஒட்டி இருப்பது போன்ற (அர்த்தநாரீஸ்வர ) தோற்றமுடையது என்கிறார் அதற்கு இன்று வரை அபிஷேகஞ் செய்து வரும் இக்கோவிலின் பரிபாலகர் திரு. வே.தங்கவடிவேல்.
இக் கோவிலுக்குத் தன் சகோதரங்களின் ஆசாரமுள்ள சந்ததியினர் காலத்திற்குக் காலம் இக் கோவிலின் பாரம்பரியத்தைப் பேணிப் பராமரித்து வர வேண்டும் என்று வாக்குத் தந்தார். அத் தெய்வ அருள் வாக்கு இன்று வரை பேணப்படுகிறது.
நாளடைவில் பொது மக்கள் விருப்பத்திற்கு இணங்கத் தனியாக ஒரு கோவில் அமைக்க வேண்டு மென்ற நோக்கத்தோடு கோண்டாவில் புகையிரத நிலயத்திற்கு அருகில் ஒரு அடியவர் இதற்குரிய காணியை வழங்கினார். அதற்குப் பாதை இல்லாதிருந்தது. பொதுமக்கள் பாதை வெட்டிக் கொடுக்க இக்காணிக்குள் கோவில் அமைத்தார்.
