பார்வதித் தாயின் வாழ்வும் அதிபதியும் தன்பதியும் தான்பதியும் ஈஸ்வரன் கோவில் தோற்றமும்.

தாயாரின் அருள் வாக்கும் அற்புதங்களும்

தாயாரின் அருள்வாக்கும் அற்புதங்களும் சொல்லில் அடங்காது. சகோதர்கட்கும், சந்ததியினர்க்கும் கொடுத்த வரங்களோ எண்ணற்றவை. கோவில் திருப்பணிகளிலும் தொண்டுகளிலும் அவர்களின் தனித்தனி பங்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறியதோடு, திருப்பணிக்கு எந்தக் காரணங்கொண்டும் ஒருவரிடமும் வலிந்து நிதி முதற்கொண்டு எதுவும் கேட்டுப் பெறல் கூடாது என்பதே அவர்களுக்கு இட்ட முக்கியமான கட்டளை. தாய் வாசல் குழந்தைகளை எந்த ஒரு நபரோ தேவதையோ துன்புறுத்த முடியாது என்ற வரத்தையும் அருளினார். இன்று வரை அந்த வாக்கு மெய் வாக்காகவே விளங்குகின்றது.

பார்வதித் தாயால் அத்திவாரமிடப்பட்டு, அவர் அருள் வாக்கின் படி புவனேஸ்வரி; அம்பாள் சமேத அதிபதீஸ்வரன் தேவஸ்தானம் பொளிந்த கருங்கற்களால் கருவறையும் மகா மண்டபமும் நிர்மாணிக்கப் பட்டு ஸ்தம்ப மண்டபத்துடன் தற்போது காட்சி தருகின்ற மேற்படி தேவஸ்தானம் அமையத் திருவருள் கூடி நின்றது.

காரணமின்றிக் காரியங்கள் நிகழ்வதில்லை. சிறு தேவதையின் தாக்கம் நாம் கடைத்தேற அவருக்கு இறை அருள் கைகூட இறைவனால் ஏற்படுத்தப் பட்ட நிகழ்வென்றே கூறலாம். இவரின் திருநீற்றின் மகிமை கிராமம், நாடு தேசம் எனப் பரவியது.

பயன் பெற்ற அடியவர்கள் பக்தியுடன் வழங்கிய நிதி, பூசைத் திரவியங்கள், திரு விளக்குகள், வகை வகையான தூப தீபங்கள் கோவில் மணி வகைகள், மற்றும் வாத்தியங்கள் இவற்றால் பூசைகளின் தன்மைகளும் விரிவடைந்து கொண்டே போயின. நாள் ஆக ஆக விசேஷ தினங்கள் யாவும் திருவிழாக்களாகின. பயன் பெற்ற அடியவர்கள் ஒவ்வொரு விசேஷ தினத்தையும் பொறுப்பேற்றுத் திருவிழாக்கள் செய்தனர்.

தாய் வாசற் குழந்தைகளும் சகோதரி, மைத்துனிமார்களும் பூசைக்கு வேண்டிய நைவேத்தியங்களைத் தயார் செய்து வந்தனர். நாளடைவில் அயலவர்களும் அடியார்களும் இக்கோவிலுடன் ஐக்கியப் படத்தொடங்கினர். பலர் மாமிச உணவை விட்டுச் சைவ உணவுக்கு மாறி மிகவும் ஆசாரத்துடன் கோவிலுக்கு உள்ளும் புறமும் தொண்டு செய்ய முந்தியடித்துக் கொண்டு வந்தனர்.

ஒரு நாள் இரவு நேரப் பூசை, இடிமின்னலுடன் கூடிய அடைமழை, தாயார் பூசையில் நின்ற படியே தம்பியாரான வேலுப்பிள்ளையை வரவழைத்து “தன் குழந்தைகள் தாய் வாசலுக்கு உதவமாட்டார்கள். உனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளே தாய் வாசற்குதவும் குழந்தைகள் அவர்களை ஆசாரமுள்ள தாய்வாசற் குழந்தைகளாக வளர்க்க வேண்டும்”  என்று உச்சியில் விபூதியிட்டு வாழ்த்தி அனுப்பினார்;. அப்போது தாயாரின் மூன்றாவது தம்பியாராகிய திருமேனி சித்தாந்த நெறியை விட்டு வேதாந்தநெறிக் கொள்கையராகிப் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்தார்.

குடும்பம் என்ற குறு வட்டத்துடன் உள்ள இறுகிய பாசமாம் பற்று அறுந்;து, உலகமெங்கும் நேச அருள் வியாபிக்க வேண்டும் என்பதனால் போலும் தாயாருக்கு இருந்த தொப்புட் கொடி உறவுகளைப், பூத்துக் குலுங்கும் அழகிய யௌவனப் பருவத்தில் பறிப்பதற்கு இறைவன் திருவுளம் கொண்டு விட்டான்.

வேலுப்பிள்ளைக்கு பிள்ளைகள் அறுவர். ஒவ்வொரு பிள்ளையும் பிறக்கும் போதும் இன்ன பிள்ளை தான் பிறக்கும் இன்ன எழுத்தில் தொடங்கும் பெயரையே வைக்க வேண்டும் என்ற அருள் வாக்குடன் வாழ்த்தி விடுவார். இரண்டாவதும் ஆண் குழந்தை. பிறந்த ஒரு சில மாதமிருக்கும் தாயாரின் கணவர் காலமாகி விட்டார். அவரைத் தொடர்ந்து தாயாரின் இரு புதல்விகளும் காலமாகினர். மூன்றாவது ஆண் மகன் உருவாய போது தாயாரின் ஆண் மகனும் காலமாகி விட்டார்.

ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்த இடிகளால் உருக் குலைந்தார் தாயார். தனக்கு நேர்ந்த இழப்புக்களை ஈடு செய்யும் பிள்ளை தன் தம்பியின் 3ம் பிள்ளை என்பதை உள் உணர்வால் உணர்ந்து அப்பிள்ளைக்குத் ‘தங்கவடிவேல்’ என்று பெயரிட்டுத் தன் கண்காணிப்பில் அன்புடன் வளர்த்து வந்தார்.

தாயார் தல யாத்திரை செல்லும் போதெல்லாம் இக்குழந்தை (தங்கவடிவேல்) யையும் கூட்டிச் செல்வார். இந்திய தல யாத்திரையின் போது இக் குழந்தை தான் அந்த அந்ந ஸ்தல விருக்ஷங்களின் கீழ் முன்பு விளையாடியதாகவும் கோவில்களுடன் சேர்ந்த ஆறுகளில் நீராடியதாகவும் கூறியதாம். இது மற்றவர்கட்குப் பிரமிப்பாக இருந்த போதும் தாயார் இதைத் தன் உணர்வை உறுதிப் படுத்தும்;; கூற்றாகவே எண்ணிக் கொண்டார். இதனால் தாயாரின் மகனே மறு பிறப்பு எடுத்து வந்து இருக்கிறார் என்று எல்லோரும் நம்பினர்.

சகோதரி தந்தையார், கணவர், பிள்ளைகள் ஆகியோரின் பிரிவால் ஏற்பட்ட மனம், பொருள் உடல் தாக்கத்தால் உயிரை மாய்க்குமளவுக்குப் போய்விட்ட தமக்கையார் விடயத்தில்; தம்பியார் வேலுப்பிள்ளை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டு வந்தார். தாயாரின் கணவர் இறந்த காலத்திலேயே குடும்பச் சுமையைக் குறைக்கச் சிறு பள்ளிப் பையனாக இருந்த இவர் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி இட்டு விட்டுச் சுருட்டுத் தொழிலாளருக்கு உதவியாளராக வேலையிற் சேர்ந்து தன்னால் இயன்ற ஆறுதல் கொடுத்தார்.

காலப்போக்கில் இவர் தன் பெரிய குடும்பம் (6 பிள்ளைகளுடன்) சகோதரி குடும்பம் தாயார் எல்லோருக்கும் போதிய உணவு, உடை, உறையுள் யாவற்றையும் பரிபூரணமாகக் கொடுக்க முடியாத நிலையில் தளர்வுற்றார். இவரது கஷ்டத்தைத் தாங்காத தாயார், தான் வாங்கிய காணியில் அவரைக் குடியிருத்தினார்;. அடிக்கு மேல் அடியாக அடுத்தடுத்துத் தனக்கு நேர்ந்த இழப்புக்களில் துடிதுடித்துத் தோள் கொடுத்த தம்பியாருக்கு அவர் ஆறுதல் கொடுத்ததில் நியாயம் இருந்தது.
சிறிது சிறிதாகத் தம்பியாரின் பொருளாதாரமும் துளிர் விடத்தொடங்கியது. பொறுப்புணர்ச்சியுடன் தமக்கெல்லாம் ஆறுதல் அளித்து வந்த தம்பி மீது தாயாருக்குக் கருணை ஏற்பட்டதில் வியப்பில்லை. அவரின் வீட்டின் கட்டடச் செலவிற்குத் தன் பங்கும் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தார். ” இப் பணம் நான் உன் வீட்டில் உரிமையுடன் இருந்து உயிர் நீக்கவே” என்று சொல்லிப் பணத்தை ஏற்க வைத்தார்.

தாயாரது இச் செய்கை அப்போது சாதாரண செய்கையாகவே கருதப்பட்டது. ஆனால் பின்பு நடந்தவற்றைப் பார்த்தால் அவரது ஆன்மீக உணர்வு எவ்வளவு தூரம் முன்கூட்டியே எல்லாவற்றையும் ஆயத்தஞ் செய்ய வைத்தது என்பதை நினைக்க ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

அந்தணர் குலத்தில் பிறக்கவில்லையாயினும், இவரும் இவரது சந்ததியினரும் அறவோராகவும் செந்தண்மை பூண்ட சிறந்த ஒழுக்க சீலர்களாகவும் வளர்ந்தனர். தம்பியார் திருமேனியும் மனம் மாறிக் குடும்பஸ்தராகி விட்டார்.
கோவிலில் காலை மாலைப் பூசைகள் மிகவும் கிரமமாக நடைபெற்று வந்தது. வளமாக வாழ விரும்புகிறவர்கள், ஆன்ம ஈடேற்றம் பெற
விரும்புகிறவர்கள், நோயுற்றோர், தேவதைக்குட்பட்டோர், மன நோயாளிகள், உறவினருடன் பிணக்குற்றோர், ஆதரவற்றோர் எனப் பலதரப்பட்டோர் தாயின் விபூதி அருட் பார்வை பெற இரவுப் பூசைக்கு வந்த வண்ணமாக இருந்தனர்.எல்லோர் குறைகளையும் கருணையுடன் கேட்டு, வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம், ஆலோசனை, ஆறுதல், ஆசீர்வாதம் மருந்து வகைகள் யாவற்றையும் வழங்கிய பின்பு தான் நித்திரைக்குச் செல்வார். இவரது நித்திரை பெரும்பாலும் பின்னிரவில்தான்.

அருள் பெற வந்தவர்கள் எவராவது பட்டினியாகச் செல்ல அனுமதிக்கமாட்டார். தூர இடங்களில் இருந்து வந்தவர்கள் இரவில் கோவிலில் தங்கிக் காலையலேயே வீடு திரும்புவர். ஆதரவற்றோர் பலர் கோவிலில் தங்கித் தம்மாலான கோவில் தொண்டுகள் செய்தனர். இரவுப் பூசைக்குத்தான் கூடுதலாகப் பொங்கல் நெய்வேத்தியங்கள் செய்யப்பட்டன.