பார்வதித் தாயின் வாழ்வும் அதிபதியும் தன்பதியும் தான்பதியும் ஈஸ்வரன் கோவில் தோற்றமும்.

பூசை முறையும் பூசையின் போது தாயாரின் தோற்றமும்.

கணவர் காலமான நாட்தொட்டு மஞ்சள் குங்குமம் அணியாது தூய வெண்ணிற ஆடையே அணிந்து வந்தார்.

ஒரு நாள் அவரது உள் உணர்வு அவருக்கு ஏதோ ஒரு விசேடம் நடக்கப் போகிறது என்பதை அறிவித்தது. அன்று பகற் பூசைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது பக்தை ஒருவர் தனக்குக் கனவில் பணிக்கப் பட்டதென்று ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் நிறப் பட்டுச் சேலை, வெள்ளைத் துணியில் தைத்த சட்டை, சந்தனம், குங்குமம்;, வெள்ளை நிறப் பூக்கள், பழங்கள் பாக்கு வெற்றிலை வைத்து, பயபக்தியுடன் அவர் முன்பாகச் சென்று ” இன்று நீங்கள் இப் பட்டுச்சேலை அணிந்து சந்தனம் குங்குமம் இட்டுத் தான் பூசை செய்ய வேண்டும்”  என்று தான் கனவில் கண்ட அருட்கட்டளையைக் கூறி வேண்டுதல் செய்தார். தாயார் தனக்கு உணர்த்தப் பட்ட மங்களக் கோலங்கள் அப்படியான மாற்றத்துக்காகத் தான் போல என்று எண்ணி, அவற்றை ஏற்று அணிந்து பூசைக்குச் சென்றார். அன்று தொட்டு அவர் பூசைக்குச் செல்லும் போது மங்களமாகப் பட்டுச்சேலை அணிந்து சந்தனம், குங்குமம்  வைத்துக் கொண்டே செல்வார்.

தோற்றத்தில் மாத்திரமல்லாமல் பூசை முறையிலும் அதிசயிக்கத் தக்கதான மாற்றம் ஏற்பட்டதற்கும் இந்த விதமாகப் பக்தர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட புலித்தோலே காரணம்.

இவ்விதமான தெய்வ வழிநடத்தல்களின் படியே தான் அவரின் பூசை முறைகளும் அமைந்திருந்தன.

வழக்கம் போல விநாயகருக்கும் மூலஸ்தானத்திலுள்ள சிவனுக்கும் ( அந்த சுயம்பு லிங்கத்திற்கும்) பூசை செய்வார். அதன் பின்பு மகாமண்டபத்திறகு வந்து ஏற்கெனவே அவரால் அறிவுறுத்தப் பட்டபடி அம்பாளுக்கு முன்பாக விரிக்கப்பட்டிருக்கும் புலித்தோலுக் கருகில் நின்று புலித்தோலுக்குத் தன் கையால் பன்னீர் தெளித்து தாம்பாளத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளை நிறப் பூக்களைத் தன் வலது கையால் அள்ளிப் புலித் தோலின் மேல் நான்கு திக்குகளிலும் நடுவேயும் சொரிவார். பின் அந்த பூக்கள் பரப்பப்பட்ட புலித் தோலில் அடி எடுத்து வைத்து நின்ற பின் மேலும் பூக்களை அள்ளித் தன் சிரசின் மேல் மூன்று முறை இடுவார். அதன் பின்பு இவரின் சகோதரரின் ஆண் பிள்ளைகளில் ஒருவர் முதலில் ஏழு அடுக்குத் தீபத்தையும் தொடர்ந்து நாகதீபம், கர்ப்பூர சப்த தீபம் அல்லது பஞ்ச தீபம், வில்வ தீபம், நெய் த் தீபம், சாம்பிராணித் தீபம், அரச்சனைத் தீபம், ஈற்றில் ஒற்றைத் தீபம் என்பனவற்றை முறைப்படி கொடுத்துக் கொண்டிருக்கப் பூசை செய்வார். இவ்விதம் மகாமண்டபப் பூசை நிறைவுறும். தாயார் மகாமண்டபத்தில் புலித்தோலின் மேல் அப்படியே நிற்பார்.

முருகன் சந்நிதி, பைரவர் சந்நிதி, நந்தி கொடிஸ்தம்ப மண்டபப் பூசைகளும், ஈற்றில் நைவேத்திய அர்ச்சனைப் பூசைகளும் உதவியாளரால் நடாத்தப்படும். பூசைகள் யாவும் கைமணி, பஞ்சமணி, காண்டாமணி சேமக்கலம,; மேளம், சங்கு நாதம் என்பவற்றுடன் நடைபெறும்.

பூசை நிறைவெய்தியதும, விபூதிச் சங்கைத் தாயார் வாங்கித் தன் சிரசிலும் முன் சேலை மடிப்பிலும் தங்கிய பூக்களுடன் அருள் பெற வந்த அடியார்களை நாடி வெளியே வந்து சகலர்க்கும் விபூதிப் பிரசாதம் முதலில் அளிப்பார். பின்பு ஆறுதல் தேடி வந்தவர்கட்கு எல்லாம் நல்வரங் கொடுத்து ஆசி வழங்குவார். நாடி வந்தோர் குறைகள் தீர விபூதியுடன் கூடிய அருட்பார்வை பார்த்து முடிய இரவு 2 மணியாகிவிடும.