பார்வதித் தாயின் வாழ்வும் அதிபதியும் தன்பதியும் தான்பதியும் ஈஸ்வரன் கோவில் தோற்றமும்.
கோவில் நிர்மாண வேலையும் சமாதியும்
கோவிலைப் புதுப்பித்து கருங் கல்லினாலும் பொளி கல்லினாலும்(படிபம்) நிலையான ஒரு கோவிலாக்க வேண்டு மென்ற எண்ணம் தாயாருக்கு ஏற்பட்டது.
எனவே 1955ம் ஆண்டு மாசி மாதம் சிவராத்திரி தினத்திலன்று முறைப்படியான பூமி பூசை செய்து பக்தர்களின் ‘அரோகரா ‘ என்ற பிரார்த்தனையும் ஒன்று சேரத் தற்போதய கோவிலின் அத்திவாரக் கல் தாயாரால் இடப்பட்டது.( அக்காட்சியைக் கண்டவர்கள் அதைப் பற்றி நினைக்கும் போதும் பேசும் போதுமெல்லாம் மயிர்க்கூச்செறிவர்) அதன் பின்பு அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் (அவரின் சமாதி உள்ள ) இடத்ததிற்குச் சென்று சிறிது நேரம் இருந்து கொண்டு “ இது தான் என் இருப்பிடம்” என்று சொன்னார்; அப்பொழுது அதை எவரும் கருத்தில் எடுக்கவில்லை.
கட்டடத்திற்கு வேண்டிய கற்கள் யாவும் கோவில் வளாகத்திற்கு வருவிக்கப்பட்டு அங்கேயே ஸ்தபதிகளால் ஏற்ற முறையில் வடிவமைக்கப் பட்டது. இவ்விதம் வடிவமைத்த கற்களால் கர்ப்பக் கிரகம் மகாமண்டபம் கட்டப்பட்டு, கருங்கற்களால் கர்ப்பக் கிரகத்தின் கூரையும் தடங்கலின்றி அமைக்கப்பட்டு விட்டது.
மகா மண்டபத்திறகுரிய கூரை வேலை அதே போல நடந்து விரைவில் கும்பாபிஷேகத்தைத் தாயார் ஒப்பேற்றி விடுவார் என்று எதிர் பார்த்திருந்தார்கள். ஆனால் யாரும் எதிர் பாராத வித்தில் மகாமண்டபத்தின் கூரைக்குக் கற்களைத் தயாராக்கப் பெரிய தடங்கல் ஏற்பட்டபடி இருந்தது. பொளிவு செய்யும் கற்களில் எல்லாம் துவாரங்கள் தென்படவே கட்டிட வேலையைத் தற்காலிகமாக நிற்பாட்ட நேர்ந்தது. விரைவில் கும்பாபிஷேகத்தைக் கண் குளிரக்கண்டு ஈடேற்றம் பெறக் காத்திருந்த தாயாரின் சகோதரர்களும் பிள்ளைகளும் தொண்டர்கள் பக்தர்களும் மிகவும் கவலைக்குள்ளானார்கள்.
இந்நிலையில் நாட்கள் போகப்போகத் தாயார் உடல் நிலையில் தளர்வு ஏற்படத்தொடங்கியது உணவில் நாட்டம் குறைந்து வந்தது. தளர்ந்த நிலையிலும் கூடத் தாயார் பூசை செய்தார். மேன்மேலும் தளர்வு ஏற்படவே பூசைக்குரிய சகல ஆயத்தங்களை மருமகன் தங்கவடிவேல் செய்து கொடுக்கத் தூப தீப ஆரத்தி மட்டும் எடுத்து அருள் பெற வந்தோர்கள் நிறைவுடன் வீடு திரும்ப விபூதி அருட்பிரசாதம் கொடுத்தார்.
இக் கால கட்டத்தில் தான் இதுவரை அவரால் தனிப்படப் பூசித்து வரப் பட்ட சுயம்பு லிங்கம் திரு தங்கவடிவேலுக்குக் காண்பிக்கப் பட்டு, அதனை வழிபடும் முறையும் அறிவறுத்தப்பட்டது.” தாயாரின் சந்ததியில் ஆசாரமுடையவர் மட்டும் தான் அப் பேழையைத் திறக்க அனுமதிக்கப் படுவர் இது தெய்வ வாக்கு ” என்றும் கூறி இருந்தார்.
பிற்காலத்தில் பூசைக்கு உதவியாளராக வந்த பக்தர் ஒருவர் அப் பேழையுள் இருப்பது எதுவாக இருக்கும் என்று அறிந்து விட வேண்டும் என்ற ஆர்வ மேலீட்டினால் ஒரு நாள் அப் பேழையைத் திறந்திருக்கிறார். உடனே அவரின் கண் பார்வை போய் விட்டது. தன் தவறை உணர்ந்த அவர், இறக்கும் வரை ஒரு உதவியாளருடன் கோவிலுக்கு வந்து இறைவியை மனமார இறைஞ்சித் தேவாரம் பாடி விமோசனம் பெற்றார்.
தாயாரின் உடல் நிலை மிக மிகப் பலவீனப்பட்டே வந்தது. உதவி இன்றி அவரால் எதுவுமே செய்ய முடியாத நிலை. வைத்தியரிடம் காண்பிக்கவும் மறுத்து வந்தார். ஆனால் தம்பியார் வேலுப்பிள்ளையின் வீட்டிற்கு வரச் சம்மதித்து விட்டார். அங்கே. சகோதரி சுபத்திரையின் பெரும் பொழுது தமக்கையாரின் அருகிலேயே. சகோதரர்களும் அவர்களின் மனைவிமாரும் குறிப்பாக தம்பியார் வேலுப்பிள்ளையின் மனைவியும் பிள்ளைகளும் மிகவும் அக்கறையுடனும் பாசம் கலந்த மதிப்புடனும் அவரை விட்டு விலகாது அருகிருந்து ஒத்தாசையும் ஆறுதலும் கொடுத்து வந்தனர். அவரின உடலோ உருகி, உருகி எலும்புக் கூடாயிற்று.
திருவெம்பாவைப் பூசை அண்மித்த காலமிது. இதுவரை காலமும் தாயாரால் மட்டுமே நடத்தப் பட்ட பூசை இம்முறை எப்படி நடக்குமோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த திரு தங்கவடிவேலிடம் “ நீ போய்ப் பூசையைத் தொடக்கி நடத்து ஆறுதலாக நான் வந்து ஒரு பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன்” என்று ஆறுதல் கூறித் தடங்கலின்றித் திருவெம்பாவைப் பூசை நடக்க வைத்தார்.
சகோதரர்கள் பிள்ளைகளின் தொடர்ந்த வறபுறுத்தலில் அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக, நாட்டு வைத்தியர் இரத்தினசபாபதியை வரவழைக்கச் சம்மதித்தார்.
வைத்தியர் வரும் போது தாயார் நிலத்தில் விரிக்கப்பட்ட பாயில் இளைய மருமகளின் நெஞ்சில் சாய்ந்திருந்தார். வந்த வைத்தியர் இருப்பதற்குக் கதிரை போடப்பட்டது. வைத்தியர் வந்து இருந்து தாயாரின் கை நாடி பார்த்த போது அவரைப் பார்த்துத் தாயார், “அங்கு சிவப்புப் பட்டினால் சுற்றி வைக்கப் பட்டிருக்கும் மருந்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். இதைக் கேட்டதும் வைத்தியர் திடுக்குற்றதுடன் கதிரையால் எழுந்து நிலத்தில் இருந்து விட்டார். வைத்தியரைத் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்ற மருமகன் பாலசுந்தரத்திடம் அந்த மருந்தை அவர் அனுப்பி இருந்தார். மாதுளம் பழச் சாற்றில் அந்த மருந்து உரைத்துக் கொடுக்கப்பட்டது.
தாயார் சமாதியாவதற்குப் 11 நாட்களுக்கு முன் இரவு நேரம் அவருடன் தம்பிமார் பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். அப்போது மருமகள் புஷ்பவதியின் நெஞ்சில் சாய்ந்திருந்தவர் தன்னை நிமிர்த்தி இருத்தும்படி கேட்டுக் கொண்டார். நிமிர்ந்து இருந்ததும் அவரின் முகத்தில் பிரமிக்கத் தக்கதான மாறுதலைக் காண முடிந்தது.
பூசையில் நிற்கும்போது தோன்றும் பிரகாசம். அசாதாரண கம்பீரமான குரவில் ” இன்னும் 11 நிமிடங்கள் இருக்கின்றன. காசியில் தோய்ந்திருக்கிறேன் நீர் சொட்டுகிறது” தலையை நன்கு துவட்டி விடும் படி சொன்னார்.
பின்பு தம்பியார் வேலுப்பிள்ளையின் மூத்த மகனை அழைத்து “தம்பி பாலசுந்தரம ! உனனிடம் தானே அந்த வெள்ளிக் குஞ்சம் போட்ட பட்டுக் குடை இருக்கிறது அதை வைத்திரு தேவைப்படும்” என்றார்.
இரண்டாவது மகன் புஷ்பநாதனை அழைத்து “புட்பம் நீ நாளை சிலாபம் புறப்பட இருக்கிறாய்;. கோவிலுக்கு உன் தேவை இருக்கிறது. வற்றாத கிணறு போன்றது உன் தொழில்” என்று கூறி மிக அருகில் அழைத்து அவரின் உச்சியில் விபூதி இட்டு அருட் பார்வை பார்த்து “தைரியமாகப் போய் வா” என்று வாக்குக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
“உங்களுக்கு எப்போதாவது இடர்கள் மனச் சஞ்சலங்கள் வந்தால் தாயார் புலித்தோலில் ஏழடுக்குத் தீபத்துடன் நிற்கும் தோற்றத்தை மனதில் கொண்டு தியானியுங்கள். துன்பங்கள் இடர்கள் சஞ்சலங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து விடும்” என்று நம் அனைவருக்கும் எதிர் காலத்திற்குரிய கலங்கரை விளக்கத்தைக் கருணையுடன் அளித்தார்.
திருவாதிரையிலன்று தாய் கோவிலுக்கு வருவா. கோவில் வாசலில் பசுக் கன்றைக் கட்டி அதற்குக் கஞ்சி கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். பின்பு மேலே பார்த்து’எத்தனையோ கோடி விளக்குகள்ளின் பிரகாசம்… எங்கும் சோதி மயமாக இருக்கிறது என்றார். நல்ல உச்சரிப்பில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லி “எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்றார். எல்லோரும் அவரின் வாக்குகளில் பொதிந்த அர்த்தத்தை அப்போது புரிந்து கொள்ளவில்லை.
திருவெம்பாவைப் பூசை ஆரம்பமாகியது மூன்றாம் பூசையிலன்று காலை தம்பியாரின் மனைவி திருமதி முத்தம்மாவைக் கூப்பிட்டு “இன்றைக்கு என்னை நன்றாகக் குளிக்க வார்த்து விடு, திருவாதிரைக்கு விரைவில் குளித்துத் துப்பரவாகக் கோவிலுக்குப் போகக் கூடியதாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தம்பியாரின் வீடு நடுவில் முற்றம் கொண்ட நாற்சார் வீடு. ஆகவே நடு முற்றத்தில் அவரை இருத்தி வெந்நீரால் தலையில் தோய வார்த்து, விபூதி சந்தனம் குங்குமம் இட்டு விடவே அன்று என்றுமில்லாத மலர்ச்சியுடன் மிக மிக லட்சுமிகரமாகக் காணப்பட்டார்.
புன் புலால் யாக்கை எம் யாக்கை. ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கும் சமாதிநிலைக்கான ஏற்பாடே அவருக்கு இக் காலகட்டத்தில் வந்த நோயாகும்.
அவர் “11 நிமிடம் இருக்கிறது” என்ற காலக்கெடு உண்மையில் 11 நாட்கள் என்பதைப் பின் நிகழ்வுகளால் தான் உணர முடிந்தது. அவர் குறிப்பிட்ட 11 நிமிடமானது அன்றில் இருந்து 11ம் நாளான திருவாதிரை நட்சத்திரம் கூடிய பூரணை நாளன்று தாயாரின் ஆவி பிரிந்தது. கதறினர் எல்லோரும்.
தாயார் சுகயீனமுற்ற காலத்தில் இருந்து மனமுடைந்து பைத்தியக்காரன் போல நடமாடிய திரு. தங்கவடிவேல் ‘ஒருவரும் அழவே கூடாது அவ்ர் சமாதி நிலை எய்தி இருக்கிறார் என்றுமே எங்களுடன் இருந்து அருள் பாலிப்பார்” என்று தான் கண்ட கனவு பற்றிச் சொன்னார். அவரின் கனவும் தாயார் (தன் இருப்பிடம் என்றதுமான ) கோவிலின் மகாமண்டபத்தில் சமாதிக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு திரு தங்கவடிவேலால் உரிய கிரியைக் கடமைகள் செய்யப் பட்டு தாயார்; சமாதி வைக்கப்பட்டார்.
11 நாட்களுக்கு முன் தாயாரால் நினைவு படுத்தப்பட்டும், அறிவுறுத்தப் பட்டும் இருந்த மாதிரியே அவரின் பூத உடல் குறித்த பட்டுக் குடையின் கீழ் எழுந்தருளப்பட்டு வரும் போது கோவில் வாசலில் கஞ்சி சாப்பிட்டபடி பசுவை இருக்கச் செய்தார்கள். கனவில் காட்டப் பட்டபடி சமாதிக்குரிய கடமைகள் திரு. தங்கவடிவேலால் செய்யப் பட்டு மகா மண்டபத்தில் தாயாரின் பூதவுடல் சமாதி வைக்கப் பட்டது.
சமாதி வைக்கப் பட்ட குறுகிய காலத்துள் மகாமண்டபக் கூரை வேலை பூர்த்தியாகிக் கொடி ஸ்தம்ப மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டது.
தாயாரின் சமாதி மகாமண்டபத்துள் அமைய வேண்டும் என்ற தெய்வ நியதி இருந்ததனால் தான்; மேற் கூரைக்கான கற்கள் பொருத்தமாகக் கிடைக்கவில்லை என்பதை அப்போது தான் உணரமுடிந்தது.
விநாயகர், வைரவர் சந்நிதிகள் புனருத்தாரணஞ் செய்யப் பட்டன. வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்குப் புதிதாக ஒரு சந்நிதியும் கோவில் மணிக்கு ஒரு கட்டிடமும் நிர்மாணிக்கப் பட்டன.
தாயாரால் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டபடி கோவிலுக்கு “புவனேஸ்வரி அம்பாள் சமேத அதிபதீஸ்வரன் தேவஸ்தானம்” என்று பெயரிடப் பட்டு 25 – 6 – 1969ல் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம் நடந்தது.
ஏற்கெனவே தாயாரின் மருமகன் திரு. புஷ்பநாதனுக்கும் இளைய சகோரர் இராசலிங்கத்திற்கும் அளிக்கப்பட்ட வாக்கும் நல்லாசிகளும் பின்பு தாயாரின் கோவில் திருப்பணிச் செலவின் பெரும் பகுதி அவர்களின். பொறுப்பில் நடக்க முடிந்தது. தாயாரின்
உடன்பிறவிகளின் சந்ததியினரான திரு. புஷ்பநாதன் திரு. பசுபதி திரு. சிவகுமார் திரு சிவயோகன் திரு. திருக்குமரன் ஆகியோரர் ஊரில் நிற்கும் காலங்களில் கோவில் பூசையைக் கிரமமாக நடத்தி வந்தனர்.
தொடர்ந்து இக் கோவிலின் விஸ்தரிப்புத் திருப்பணிகள் காலத்;துக்காலம் தாயாரின் கடைசித் தம்பியார் திரு இராசலிங்கத்தாலும் அவரின் மறைவிற்குப் பின்னர் திரு. புஷ்பநாதனின் வியாபார லாபத்தின் ஒரு பகுதியாலும் தாயாரின் மூத்த சகோதரரின் மூத்த மகள் திருமதி புவனேஸ்வரி ஆறுமுகத்தாலும் தாயாரைப் பிரார்த்தித்து அருள் பெற்ற பக்தர்கள் அளிக்கும் நிதியாலும் மற்றும் தாயாரின் சகோதரர்களின் சந்ததியினரின் காணிக்கைகளாலும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. கோவில் வளாகமும் விஸ்தரிக்கப பட்டுக்கொண்டே வருகிறது.
கோவிலில் தேர் தீர்த்தம் என்பனவும் நடைபெற அருள் பாலிக்கப் பட்டிருக்கிறது. தக்ஷணாமூர்த்தி நடராஜர் துர்க்கை அம்மன் நவக்கிரகம் ஆகியோர்க்குத் தனித்தனி கோவில்களும் சுற்றுப் பிரகாரமும் நிர்மாணிக்கப் பட்டுத் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற இறை அருள்பாலித்த வண்ணம் இருக்கிற தென்பது கண்கூடு.
