பார்வதித் தாயின் வாழ்வும் அதிபதியும் தன்பதியும் தான்பதியும் ஈஸ்வரன் கோவில் தோற்றமும்.
கோவில் வரலாறு (கேட்டதும் கண்டதும்)
(தாயாரின் சகோதரியாலும்; கம்பியாரின் மனைவி திருமதி முத்தம்மாவாலும் அவவப்போது இளைய மகளிடம் கூறப்பட்டவையும் நேரில் கண்டனவும்)
ஒரு ஆலமரம் கோடானு கோடி வித்துக்களை விதைக்கின்றது. அவை எல்லாம் முளைத்து மரமாகி விடுவதில்லை. அவற்றில் ஒரு சிலவே முளைக்கின்றன. அவ்வாறு முளைப்பவற்றிலும் ஒரு சிலவே தளைத்தோங்கி வளர்ந்து மக்களுக்கும் மாக்களுக்கும் நிழல் கொடுக்கின்றன. அது போலவே உலகிலுள்ள மக்களுள் கோடியில் ஒருவனே மனிதருள் தெய்வமாகின்றான்.
இந்த அடிப்படையில் எங்கும் நிறைந்த இறைவன் திருவருளை எங்கள் அறிவில் நிறைவாக்கி நாம் மங்களமாய் வாழ வழி காட்டிய தெய்வம் தான் பார்வதித்தாய்.
தமிழ் ஈழ யாழ்ப்பாணம் கோண்டாவில் தென்மேற்கு செங்கற்பனை என்னும் இடத்தில் இற்றைக்கு 133 ஆண்டுகளுக்கு முன் 1884ம் ஆண்டில் சிவ கோத்திர குரு குலத்தில் பொன்னம்பலம் என்னும் செம்மலுக்கும், சின்னாச்சி என்னும் செம்மனச் செல்விக்கும், சிவ மணம் பரப்பி, குலம் விளங்கவெனப் பார்வதித் தாய் திரு அவதாரஞ் செய்தார். இவருக்குப் பின்சகோதரர்களாகக் கந்தையா, சிவக்கொழுந்து, வேலுப்பிள்ளை, திருமேனி, இராசலிங்கம், தங்கமணி என்போர் பிறந்தனர்.
பெரிய குடும்பம், சொந்த நிலம் இல்லை, வறுமை தந்தையார் அயலவரின் நிலத்தில் சிறு விவசாயஞ் செய்து குடும்பம் நடத்தினார். இருப்பிடம் சிறு குடிசை. செல்வி பார்வதி 13ம் வயதில் பூப்பெய்தினார். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தனர் இக்குடும்பத்தினர்.
செல்வி பார்வதி தன் தாயாரோடு சேர்ந்து அரும்பாடு பட்டுத் தன் பின்னவர்களை வளர்த்தார். இவருக்குப் 16 வயது வந்தவுடன் இவரது தந்தையார் தனக்குப் பின் தன் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய ஒருவரை இவருக்கு மணம் முடித்து வைத்தார். இவரது தந்தையின் பெயரையே கொண்ட இவரது கணவர் புகையிரத இலாகாவில் சமயா சமய ஊழியராகக் கடமையாற்றியவர். ஒழுக்கசீலர். சிவபக்தி கொண்டவர். சிறிது காலத்தின் பின் தந்தையார் காலமானார். இச்சம்பவத்திற்குச் சிறிது காலத்திற்கு முன் தன் மருமகனை அழைத்துத் தன் மக்களை வளர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மருமகனார் அவர்களை அன்பாளர்களாகவும் பண்பாளர்களாகவும் வளர்த்தார். தந்தை இறக்கும் பொழுது பார்வதி அம்மையாரின் இளைய சகோதரிக்கு வயது ஆறு. அவரின் ஊதிபம் வாழ்க்கைச் செலவிற்குப் போதவில்லை. இதனால் தன் வேலையை விட்டு விலகிக் குத்தகைக்குக் காணி எடுத்து விவசாயஞ் செய்தார்.
இவரது வழிகாட்டலில் இக்குடும்பத்தவர் யாவரும் நல்ல பண்புடையோர்களாக வளர்ந்தனர். நோய், பிணி, வறுமை இவர்களை விட்டு வைக்கவில்லை. இறைவன் திருவடியே தஞ்சம் என்ற வைராக்கியம் இவர்கள் மனதில் ஒருபொழுதும் குறையவில்லை.
இப்படி இருக்கும் பொழுது இவரின் சகோதரி சிவக்கொழுந்து (சுபத்திரை) தேவதையின் தாக்கத்திற்குள்ளானார். இக்காலங்களில் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு இத் தாக்கம் நீங்க வேண்டுதல் செய்தனர். இவ்வாறு ஒரு முறை ஒரு திங்கட்கிழமை நந்தாவில் அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்யும் பொழுது பொங்கல் பானை மூன்றாகப் பிளந்து, அம்மனுக்கு நிவேதிக்க வைத்த பொங்கல் அடுப்புக்குள் கொட்டி இவர்களையும் நனைத்தது.
இந்த வேளையில் பார்வதித் தாய்க்கு ‘நீ உன் சகோதரியுடன் நல்லூர் முருகனிடம் வா” என்ற ஒரு அசரீரி கேட்டது. அந்த அசரீரியின்படி நல்லூருக்குக் கூட்டிச் சென்றனர்.
அங்கும் இவரின் சகோதரி சுபத்திரை தேவதையின் தாக்கத்துக்குள்ளானார். இவை வைரர் சந்நிதியில் நிற்கும் போது நடந்தது. பார்வதித் தாய்க்கு முருகன் தோன்றி ‘ ஈசான (கிழக்கு) மூலையில் நிற்கும் வேப்பமரத்தில 51 வேப்பிலை நெட்டு எடுத்துத் தான் கூறும் மந்திரத்தை உச்சரித்து புவனேஸ்வரி அம்பாளை நினைத்து அவ் வேப்பிலையால் பார்வை பார்த்தால் இத் தாக்கம் நீங்கும்” என்று அருளினார். பார்வதித் தாய் அப்படியே அந்த அருள் வாக்கில் ஒன்றிய உணர்வுடன் செய்யவே அத்தேவதையின் ஆற்றல் அடங்கி சுபத்திரை குணமானார்.
“உனது கர்மம் புறத்தியம் கிரி அம்மனின் தாக்கம் தான் இவ்வளவு துன்பத்தைத் தந்தது. அந்த அம்மனை வழிபட்டு அருளைப் பெற்றால் உன் துன்பம் தீரும்” என்று தாயாரால் கூறப்பட்டதாம். ஆனால் பின்பு அவர் அந்தப் பெயருடைய அம்மனைப் பற்றிக் கதைத்ததாக இல்லை.
இச் சம்பவத்தின் பின் தாயாரின் அன்றாட நடைமுறையில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டது. தாயார் தான் இருக்கும் காணியில் ஒரு சிறிய குடிசை அமைத்து இறைவனின் வாக்குப்படி ஒரு வேல் வைத்து மிகுந்த ஆசாரத்துடன் வழிபாடு செய்யத் தொடங்கினார். அதன்பின் படிப்படியாக விநாயகர், சிவலிங்கம் முருகன், வள்ளி, தெய்வானை முதலியவற்றை ஆவாகனஞ் செய்து வழிபடலானார்.
இவ்விதமாக இவர் வழிபாடு செய்து வரும்போது பலவகையான அருட்சக்தியும் சித்திகளும் கைவரப் பெற்றார். அவரின் அருட்செயல்களை அறிந்த பலரும் அவரிடம் வந்து அருட்பார்வையுடன் விபூதியும் பெற்றுத் தங்கள் தங்கள் நோய் துன்பங்களை நீக்கிக்கொண்டனர்.
மேன்மேலும் தெய்வீக அருள் பாலிக்கும் பொருட்டுத் தான் போலும் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று, அவர் பூசையில் நிற்கும் பொழுது தனது சகோதரர் வேலுப்பிள்ளையைக் கூப்பிட்டு கோண்டாவில் பழைய புகையிரதநிலையத்திற்குக் கிழக்குப் பக்கமாக (அவரது பழைய கோவில் அமைந்த இடத்தில் ) மிகவும் ஆழமாகக் கிடங்கு வெட்டுங்கள் உங்களுக்கு வற்றாதசெல்வத்தை ஏழேழு சந்ததிக்கும் தாய் தருவா”என்று வாக்குக் கொடுத்தார். அப்படியே கிடங்கு வெட்டினார்கள். பாம்புகள் பல நாகம் உட்பட அக் கிடங்கில் இறந்து கிடக்கக் கண்டனர்.
அம்மையார் காலை அந்த இடத்திற்குச் சென்ற பொழுது ஒரு பற்றைக்கருகில் பிரகாசம் பொருந்திய ஒரு பொருள் அவருக்குத் தென்பட்டது. அந்தப் பொருளைப் “பசுவின் சாணத்தால் மூடி எடு” என்ற உள் உணர்வு உணர்த்தவே அதை எடுத்து வந்து பாலினால்; அபிஷேகஞ் செய்து பொன்னாலான பேழையில் வைத்து ஏனைய தெய்வ விக்கிரகங்களுடன் சேர்த்து வழிபடத் தொடங்கினார்.
இறை அருளால் பெற்ற நாகமணியாகிய அந்த லிங்கத்தை நீண்ட காலமாக மிக இரகசியமாகவே பூசித்து வந்தார். தான் சமாதியடையச் சில தினங்களுக்கு முன்பு தான் தன் சகோதரர் வேலுப்பிள்ளையின் மகன் தங்கவடிவேலுக்குக் காட்டி அந்த லிங்கத்தின் வரலாற்றைச் சொல்லி, அதைப் பூசிக்கும் முறையையும் காண்பித்தார். தனக்குப் பின் அதற்கு ஆசாரமும் ஒழுக்கமும் உள்ள தன் சகோதரர்களின் சந்ததியினரே பூசைக்கு உரியவர்கள் என்றும் வாக்குக் கொடுத்தார். அவரது அருள் வாக்கு இன்று வரை பேணப்படுகிறது.
நாம் செய்த புண்ணியத்தின் பயனாக எம்மவர் அனைவரும் வழிபட்டு உய்யும் பொருட்டு முன் இருந்ததை விடப் பெரிய கோவில் ஒன்று அமைக்க இறையருள் கூடியது. இக் கோவிலில் பிள்ளையார் சந்நிதி, மூலஸ்தானத்தில் சிவலிங்கம், வேலாயுதப் பெருமான், நாகர்கள் வழிபட்ட சுயம்பு லிங்கம் என்பனவும், மகாமண்டபத்தில் சந்தான கோபாலன், நாகர் வழிபட்டதெனச் சொல்லப்பட்ட தென்னை மரத் தேங்காயை 51 வேப்பிலை நெட்டுக்களால் சுற்றி ஏழு நிறப் பட்டு நூல் கொண்டு திரித்த கயிறு கொண்டு 21 முறை சுற்றிக் கட்டி அதில் சரஸ்வதியை ஆவாகனஞ் செய்தும், தங்கத் தகட்டில் யந்திரம் என்பன அமைத்தும், வீரபத்திரருக்குத் தனியாக ஒரு கோவில் அமைத்தும், கொடிஸ்தம்ப மண்டபத்தில் நந்தி பலிபீடம் அமைத்தும், காலையிலும் மாலையிலும் வழிபாடு நடத்தி வந்தார். இக் காலங்களில் இரவு பூசை முடிந்தவுடன் தெய்வீக சக்தியினால் அடியவர்கள் வேண்டும் வரங்களை அளித்தும் அவர்கள் படும் இன்னல்களை அகற்றியும் அருள் புரிந்தார்.
வெள்ளி திங்களில் சிதம்பரத்தில் அர்த்த சாமப்பூசை நிறைவேறி கதவு சாத்தும் நேரம் இங்கு இவர் தன் பூசையைத் தொடங்குவார். அடியார்களின் துன்பத்தைப் போக்கத் தாய் தன் பிள்ளைகளின் துன்பம் போக்கும் உணர்வுடன் 51 வேப்பிலை கட்டப்பட்ட சரஸ்வதியைத் தியானித்த கலையோடு பக்தர்கட்கு அருள் வழங்குவார்.
ஆறுமுகப்பெருமானின் அருளினால் தெய்வீக சக்தி உண்டானதால் அடியார்க்கு வினை தீர்க்குமுகமாக முருகனின் நாம மந்திரத்தை அறுகோணம் உள்ள அரிதங்கத் தகட்டில் பொறித்து குறைந்தது 21 நாள் பூசையில் வைத்து வேண்டும் அடியார்களுக்கு அட்சரக்கூட்டில் அணியக் கொடுப்பார்.
